Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Sona Theatre - Trichy Theeran Adhigaaram Ondru Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  6-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் தொடர்கிறது; பொங்கல் பண்டிகை சிறப்பு முன்பதிவும் ரத்து; நடுத்தர வர்க்கத்தினர் கடும் அவதி

6-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் தொடர்கிறது; பொங்கல் பண்டிகை சிறப்பு முன்பதிவும் ரத்து; நடுத்தர வர்க்கத்தினர் கடும் அவதிதமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களது வைப்புத்தொகையின் நிலுவையினை வழங்கக்கோரியும், ஊதிய உயர்வு பிரச்சினை உள்ளிட்ட பணி பாதுகாப்பு தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கடந்த 4-ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு விளக்கம் கேட்டு போக்குவரத்துத்துறை தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பிய பின்னரும், தொழிற்சங்கங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. உரிய முடிவு கிடைக்கும் வரையிலும் போராட்டத்தை தொய்வு இல்லாமல் நடத்துவோம் என்று தொழிற்சங்கங்கள் திட்டவட்டமாக அறிவித்து உள்ளன.
இந்தநிலையில் இன்று 6-வது நாளாக போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்கிறது. போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது. மேலும், போக்குவரத்து ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், இந்த உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள், நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. இருந்தபோதிலும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் ஆறாவது நாளாக இன்றும் தொடர்கிறது. இதையடுத்து பல்வேறு இடங்களில் தற்காலிக ஓட்டுநர்களால் தற்போது பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.
சென்னை, திருச்சி, கோவை, மதுரை, நெல்லை, தஞ்சை என மாநிலத்தின் பல்வேறு பணிமனைகளில் இருந்து குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டு வருகின்றன. எதிர் வரும் பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு சிறப்பு பேருந்து முன்பதிவு மையத்தின் தொடக்க விழா நிகழ்ச்சிகள் இன்று நடத்துவதாக கடந்த வாரம் முடிவெடுக்கப்பட்டிருந்தது. இந்த தொடர் போராட்டத்தின் எதிரொலியாக அந்த நிகழ்ச்சிகளும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் தமிழகம் முழுவதும் 70 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இன்று காலை நிலவரப்படி கன்னியாகுமரில் 865 பேருந்துகளில் 225 பேருந்துகள் இயக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. திருவள்ளூர்-60%, கன்னியாகுமரியில் 40%, திருச்சியில் 40%, கோவையில் 40%, புதுக்கோட்டை - 50% அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், போக்குவரத்து ஊழியர்களின் தொடர் போராட்டம் எதிரொலியால், பொங்கல் சிறப்பு பேருந்து முன்பதிவு மையத்தின் தொடக்க விழா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு மையங்கள் இன்று முதல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும் 11,12,13 தேதிகளில் 11,983 சிறப்பு பெருந்துகள் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
காலவரையற்ற போராட்டத்தால் கம்பெனிகள், அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் வழக்கத்துக்கு மாறாக 1 மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரையிலும் தாமதமாகவே செல்லும் நிலை ஏற்பட்டது. போக்குவரத்து தொழிலாளர்களின் இந்த போராட்டத்தால் பேருந்துகளை மட்டுமே நம்பி இருக்கும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வேலை நிறுத்தத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சில ஆட்டோ டிரைவர்கள் நிர்ணயிக்கப்பட்டதை விடவும், அதிக கட்டணம் வசூலித்ததாக பயணிகள் சிலர் புகார் தெரிவித்தனர்.

  Source : justknow.in
Post Date : 09-01-18
Total Visitors : 144
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments