Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Ippadai Vellum Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  காவிரி வரைவு செயல்திட்டம் இன்று தாக்கல் ஆகிறது? தமிழகத்துக்கு நியாயம் கிடைக்குமா?

காவிரி வரைவு செயல்திட்டம் இன்று தாக்கல் ஆகிறது? தமிழகத்துக்கு நியாயம் கிடைக்குமா?காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த கெடு இன்று முடிகிறது. இதனால், நீதிமன்றத்தில் வரைவு செயல்திட்டத்தை மத்திய அரசு இன்று தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய விசாரணையில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் நேரில் ஆஜராகி பதிலளிக்க உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
காவிரி நதிநீர் பங்கீட்டை செயல்படுத்துவதற்காக காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களில் அமைக்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பில் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. கடந்த 3ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் அனைவரும் கர்நாடக மாநில தேர்தல் பிரசாரத்தில் இருப்பதால் வரைவு செயல்திட்டத்திற்கான ஒப்புதல் பெற முடியவில்லை; 10 நாள் அவகாசம் வேண்டும் என்று கேட்டது மத்திய அரசு தரப்பு.
இதையடுத்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ‘காவிரி விவகாரத்தில் மே மாத இறுதிக்குள் 4 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு திறந்து விட நீதிமன்றம் உத்தரவிட்டால் அதனை செயல்படுத்த கர்நாடகா தயாராக உள்ளதா? என மாநில அரசுடன் ஆலோசனை நடத்தி மே 8ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.
கர்நாடகத்தில் கடும் வறட்சி நிலவி வருவதால் தமிழகத்துக்கு கண்டிப்பாக தண்ணீர் திறந்து விடமுடியாது என 7ம் தேதி கர்நாடக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மே 8ம் தேதி விசாரணையின்போது காவிரி வரைவு செயல் திட்டம் தயார் செய்யப்பட்டு விட்டதாகவும், தேர்தல் பிரசாரம் முடிந்து பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர்களும் திரும்பிய பிறகு அதற்கான ஒப்புதல் பெறப்பட்டு விடும் என மத்திய அரசு தரப்பில் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
காவிரி விவகாரத்தில் வரைவு செயல்திட்டத்தை தயார் செய்ய அரசியல் காரணங்களை கூறுவது முறையானது அல்ல என்று மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி கடும் கண்டனத்தை தெரிவித்தார். மேலும், மே 14-ம் தேதி காலை 10.30 மணிக்கு மத்திய அரசின் நீர்வளத் துறை செயலாளர் யு.பி.சிங் காவிரி தொடர்பான வரைவு செயல்திட்டத்தை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், சந்திராசூட் ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.
இன்றைய விசாரணையின்போது, மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்யும் என்றும், இதற்காக, நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங்கும் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக விவசாயிகள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, உச்ச நீதிமன்றத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான வரைவு திட்டத்தை மத்திய அரசு இன்று தாக்கல் செய்தால், அது நீர் அளவை கண்காணிக்கும் அதிகாரம் உள்ளதாக இருக்குமா அல்லது எந்த அதிகாரமும் இல்லாத புதிய அமைப்பாக இருக்குமா என்பது தெரியவரும். அதிகாரமற்ற வரைவு செயல் திட்டம் வந்தால் தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும் என்று பல்வேறு விவசாய அமைப்பினர் கூறியுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வரைவு செயல்திட்டத்தை தயார் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தாலும், கர்நாடக தேர்தலை காரணம் காட்டி அதற்கான ஒப்புதல் பெறாமல் மத்திய அரசு காலதாமதம் செய்து வந்தது. இந்நிலையில் கர்நாடக சட்டமன்ற தேர்தல் நேற்று முன்தினம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் நடந்து முடிந்துள்ளது.
இருப்பினும் காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் வரைவு செயல்திட்டத்திற்கான ஒப்புதல் பெறப்பட்டு விட்டதா? என்று இதுவரை எந்த ஒரு தகவலும் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால், மே 14-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வரைவு செயல் திட்டம் கண்டிப்பாக தாக்கல் செய்யப்படும் என மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் செயலாளர் யு.பி.சிங் கடந்த 10-ம் தேதி உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே காவிரி மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் நேற்று தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், அதிகாரம் இல்லாத காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் வகையிலான வரைவு செயல்திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்தால் போராட்டம் தீவிரம் அடையும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளர் தனபாலன் நாகப்பட்டினத்தில் நிருபர்களிடம் பேசுகையில், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழுவை அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து நாகப்பட்டினத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) விவசாயிகள் கடலில் மூழ்கி தற்கொலை செய்யும் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

  Source : justknow.in
Post Date : 14-05-18
Total Visitors : 97
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments